Wednesday 11 October 2017

தொழில் முனைவோர்

ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின்  தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். பொருத்துகை ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பெருமளவிலான மலிவான தானுந்துகளைத் தயாரிக்கும், ஃபோர்டியம் எனப்பட்ட பெரும்படித் தயாரிப்பு முறையை இவர் உருவாக்கியதுடன், அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். நுகர்வோரியமே அமைதிக்கான வழி என்னும் நம்பிக்கையுடன் கூடிய, ஒரு உலகம் தழுவிய நோக்கை ஃபோர்ட் கொண்டிருந்தார்.
உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான ஃபோர்டின் முயற்சிகள், பல தொழில்நுட்ப, வணிகப் புத்தாக்கங்களுக்கு வழிவகுத்தன. இவற்றுள் விற்பனைஉரிம  முறையும் ஒன்றாகும். இதன் மூலம் அவரது உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனையாளர்கள் அமெரிக்காவின் ஒவ்வெரு நகரத்திலும் இருந்தனர். ஐரோப்பாவிலும் பெரிய நகரங்களில் விற்பனை முகவர்கள் இருந்தனர். ஃபோர்ட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஃபோர்ட் அடிப்படை நிலையத்துக்கு விட்டுச் சென்றார். ஆனால், தனது குடும்பம் கம்பனியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தார்.

1 comment: