Sunday 15 October 2017

தியேட்டர் உரிமையாளர்கள் கோபம்..!

      அரசின் கேளி்க்கை வரியை எதிர்த்து தனது போராட்டத்தை ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் தற்போதைய எதிர்ப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மீது பாய்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக செய்தித் துறை அமைச்சருடன் கேளிக்கை வரிவிலக்கு, மற்றும் திரையரங்குகளின் புதிய கட்டண உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார் விஷால்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது திரையரங்கு உரிமையாளர்கள் கேளி்க்கை வரி நீக்கத்தைவிடவும், தற்போதைய கட்டண உயர்வைவிடவும் அதிகமான கட்டணத்தை கேட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இதனால் விஷாலுக்கும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் 120 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வேண்டாம் என்று விஷால் சொல்ல.. மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களோ இப்போதைய கட்டணத்தை இன்னும் உயர்த்தித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். திரைப்பட உலகின் சங்கங்களிடையே இருக்கும் இந்த மோதலினால், அரசுத் தரப்பு ஒரு நிலையான முடிவுக்கு வர முடியாமல் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நேற்று இரவு திடீரென்று விஷால் ஒரு அறிவி்ப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் திரையரங்குகளின் இப்போதைய நிலைமையை மாற்றியமைக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டிருக்கிறார். 
இதனை பார்த்துவிட்டு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் விஷால் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
விஷால் வெளியிட்ட அறிவிப்புகள் இவைகள்தான் :
“இன்று முதல்(அக்டோபர் 13, வெள்ளிக்கிழமை) அரசு நிர்ணயம் செய்திருக்கும் கட்டணங்களைத்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.
தியேட்டர் கேண்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் MRP விலைக்குதான் விற்கப்பட வேண்டும்.
அம்மா தண்ணீர் பாட்டில்கள் தியேட்டரில் விற்கப்படவேண்டும்.
தியேட்டர்களுக்கு தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்.
தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும்.”
இந்த அறிவிக்கையை கேள்விப்பட்டு எங்களுடைய உரிமையில் கை வைக்க விஷாலுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரின் பதிலடி விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவை அழிப்பதற்கு பைரசி வீடியோவும், தமிழ் ராக்கர்ஸும் தேவையே இல்லை. இப்போது இருக்கின்ற திரைப்பட சங்கங்களே போதும்..!

Saturday 14 October 2017

தமிழில் ஒப்பிலக்கியம்



தமிழில் ஒப்பிலக்கியம்
ஓர் இலக்கியத்துடன் காலம், வகை, உள்ளடக்கம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒருவழியில் தொடர்புடைய வேறு மொழியிலுள்ள இலக்கியத்தைக் குறிப்பிட்ட ஒப்பிலக்கியக் கோட்பாட்டின் வழி் செய்யப்படும் ஆராய்ச்சியே ஒப்பிலக்கியம்.ஒப்பிலக்கியம்என்பத னால் அது ஏதோ ஓர் இலக்கியம் என்று நினைக்கலாகாது. தாக்கக் கோட்பாடு, வகைமைக் கோட்பாடு, மையக்கருத்துக் கோட்பாடு போன்ற பலவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராயலாம். இலக்கியத்தைப் பிற நுண்கலைகளுடன் அல்லது பிறதுறைகளுடன் ஒப்பிட்டு ஆராய்கின்ற ஆய்வுகளும் ஒப்பிலக்கியம் என்றே சொல்லப்படும்.
ஒப்பிலக்கியம் என்பது ஒருபுறம், தனது இலக்கியத்தோடு தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள இன்னொரு இலக்கி யத்தை ஒப்பிட்டு ஆராய்தல் என்பதோடு, இலக்கியத்திற்கும், சிற்பம், கட்டிடக்கலை, இசை போன்ற கலைகள், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மாதிரியான சமூக அறிவியல்கள், தத்துவம், வரலாறு, இவை போலுள்ள பிற அறிவுத்துறை களுக்குமான உறவுகளைக் கண்டு ஆராய்வதுமாகும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் இலக்கியத்தை இன்னொரு இலக்கியத்தோடு ஒப்பிடுவதும், இலக்கியத்தை மனித அனுபவத்தின் பிற துறை களோடு ஒப்பிடுவதும் ஆகும்.என்று ரிமாக் ஒப்பிலக்கியத்திற்கான வரையறையைச் சொல்லு கிறார்.
ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றின் உயர்வையோ இன் னொன்றின் தாழ்வையோ சொல்வதற்காக அல்ல. மாறாக, இலக் கியத்தின் பொதுத் தன்மைகளையும் முழுமையையும் அறிவதே ஒப்பிலக்கியத்தின் இலட்சியம். ஏதேனுமொரு புறவயமான முறை யின் வாயிலாக எல்லா வித்தியாசங்களையும் மாறுபாடுகளை யும் கடந்துசென்று, இலக்கியத்தின் பொதுத்தன்மையைக் காண் பது தான் ஒப்பிலக்கியத்தின் நோக்கம்.
இன்றைக்கும் ஒப்பிலக்கியம் என்பது ஏதோ இரண்டு இலக்கி யங்களை ஒப்பிடுவது என்று நினைக்கும் கல்வித்துறை ஆய் வாளர்கள் உள்ளனர். இதுபற்றி பேராசிரியர் மருதநாயகத்தின் எச்சரிக்கை இங்கே குறிப்பிடத்தகும்.
இரண்டு நூல்கள் ஆங்கில மொழியில் இருக்குமானால் அவை யிரண்டும் இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாக இருந்தால் அவற்றை ஒப்பிடுதல் ஒப்பிலக்கியமாகும் என்பர். ஒரு நூலை எழுதியவர் இங்கிலாந்தைச் சார்ந்தவராகவும், மற்றதை எழுதி யவர் அமெரிக்காவையோ வேறு ஆங்கில மொழியைப் படைப் பிலக்கியத்தில் கையாளுகின்ற நாட்டையோ சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். பாரதி, பாரதிதாசன் ஆகியோருடைய கவிதை களை ஒப்பிடுவது திறனாய்வுத் துறையில் அடங்கும்; ஆனால் ஒப்பிலக்கியம் ஆகாது. அவர்களது நூல்கள் சார்ந்த தமிழ் இலக் கியம் ஒரே பண்பாட்டின் விளைவாகும். பாரதியையோ, பாரதிதாச னையோ ஈழத்தமிழ்க் கவிஞர் ஒருவரோடு ஒப்பிடுதல் ஒப்பிலக் கியமாக ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வேற்றுமையைப் புறக்கணித் தால் ஒப்பிலக்கியத்தின் தனித்தன்மை கெட்டுவிடும்.
இங்கு இன்னொரு தெளிவும் தேவை. ஏறத்தாழ சமகாலத்தைச் சேர்ந்த பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை ஒப்பிடுவது ஒப்பிலக் கியமாகாது. ஆனால் கபிலரையும் பாரதியாரையும் ஒப்பிடுவது ஒப்பிலக்கியம் ஆகுமா? இருவருமே தமிழ்ப்பண்பாட்டைச் சேர்ந்த வர்கள் என்று புறந்தள்ளுவதை விட, வெவ்வேறு காலப் பண்பாடு களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ஒப்பிடுவது ஒப்பி லக்கியம் என்று கொள்ளலாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனாலும் ஒப்பிடக்கூடிய பண்பாட்டுக்கூறுகள் வெவ்வேறாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒப்பிலக்கியம் தனிப்பட்ட ஒரு ஆய்வு முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது சரியாகாது. ஒப்பிலக்கியம் ஓர் அவியல் ஆய்வுக்களம். எந்த முறையையும் எந்த நெறியையும் எடுத்துத் தன் நோக்கத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவல்லது என்று தான் கூறமுடியும்.
ஒப்பிலக்கியத்தின் சாத்தியக்கூறுகளை ஜி.யு. போப் சுட்டிக் காட்டியிருக்கிறார். Tamil Heroic Poems என்று அவர் தம் நூலுக்குக் கொடுத்த தலைப்பே கைலாசபதியின் ஒப்பியலாய்வுக்கு முன்னோடியாக அமைந்தது. பிறகு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் ஹோமரின் கதைப்பாடல்கள், புறப் பாடல்களோடு ஒப்புமை உடையன என்று சுட்டிக்காட்டினார். 1927இல் என்.கே. சித்தாந்தா என்பவர், Heroic Age of India என்னும் தமது நூலில், தமிழ்ப் புறப்பாடல்கள் வீரயுகப்பாடல்களைச் சேர்ந்தவை என்று சொல்லியிருக்கிறார். இக்கருத்தை வையாபுரிப்பிள்ளையும் தமது காவிய காலம் நூலில் ஏற்றுப் பாராட்டியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒப்பிலக்கியத்திற்கான சாத்தியப்பாடு பற்றிய குறிப்புகள். தமிழில் ஒப்பிலக்கியத்துக்கு ஒரு சிறிய பாரம்பரியம் இருக்கிறது.
ஒப்பிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நல்ல பணியாற்றிய திறனாய்வாளர்கள் சிலர் தமிழில் உள்ளனர். முதன்முதலில் இதைத் தொடங்கிவைத்தவர் வ.வே.சு. ஐயர். அவர் தமது A Study of Kamban’s Ramayana என்ற நூலில் உலக மகா காவிய கர்த்தாக்கள் அனைவருடனும் கம்பரை ஒப்பிட்டு கம்பர் அவர்களையெல்லாம் விஞ்சும் உலகமகாகவி என்பதை நிறுவியுள்ளார். வ.வே.சு. ஐயருக்குப் பின் பலநாட்டுக் கவிதைக் கொள்கைகளையும் ஒப்பிடும் வகையில் அறிமுகப்படுத்தியவர் ரா.ஸ்ரீ. தேசிகன். சிலகாலத்துக்குப் பிறகு இத்துறையில் முயற்சிசெய்தவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் பாரதியும் ஷெல்லியும் என்ற நூலை ஆக்கித் தந்தார்.
இதற்குப் பிறகு பெரும்பாலும் ஒப்பிலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்ப் பேராசிரியர்களே. தனிநாயகம் அடிகள், சங்க இலக்கியத்தை கிரேக்க இலக்கியத்துடன் பலசமயங்களில் ஒப்பிட்டு நோக்கி யிருக்கிறார். தமிழின் இயற்கைநெறிக் கவிதை, கிரேக்க, இலத்தீன்மொழிக் கவிதைகளுடன் நெருங்கிய உறவுகொண்டிருப்பதை அவர் விளக்கியுள்ளார்.
அவருக்குப் பின் இத்துறையில் முயன்றவர் வை. சச்சிதானந்தன். The Impact of Western Thought on Bharati என்ற ஆய்வுநூல் பரந்த கவனத்தைப் பெற்றது. மேற்கத்திய ரொமாண்டிக் கவிஞர்களும் டென்னிசன், வால்ட் விட்மன் போன்றவர்களும் பாரதியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை விரிவாக இந்த நூல் ஆராய்ந்தது. பின்னர் அவர் Whitman and Bharati – A Comparative study என்ற நூலையும் ஆக்கினார். வேதாந்த இறையியல், உலக சகோதரத்துவம் ஆகிய நிலைகளில் இருவரையும் ஒப்பிடுகிறது அந்நூல்.
இச்சமயத்தில் ஒப்பிலக்கிய ஆய்வுக்கு உந்துசக்தியாக க. கைலாசபதியின் Tamil Heroic Poetry என்ற நூல் வெளிவந்தது. அவரே ஒப்பிலக்கியக் கொள்கைகளைத் தமிழில் விளக்குகின்ற ஒப்பியல் இலக்கியம்என்ற நூலை எழுதினார். அடியும் முடியும்என்னும் நூலிலும் ஒப்பிலக்கியம் பற்றிய இரு கட்டுரைகள் உள்ளன. மேலும் பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு இருமகாகவிகள்என்ற நூலையும் ஆக்கினார். இந்த நூலில் பாரதி, தாகூர் இருவருடைய பின்னணிகளும் ஒப்பிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் இருவரும் மலர்ந்தமைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. வாழ்க்கை வரலாற்று நிலையிலான ஒப்பியல் நூல் இது.பாரதியும் மேல்நாட்டுக் கவிஞர்களும்என்ற நூலையும் இவர் ஆக்கியுள்ளார்.
கா. சிவத்தம்பி, கிரேக்க நாடகங்களையும் தமிழ் நாடகங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளார்.
மார்க்சிய ஆய்வாளரான பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், கம்பனையும் மில்டனையும் விரிவாக ஒப்பிட்டுக் கம்பனும் மில்டனும் என்ற நூலைப் படைத்தார். (பிறகு கம்பனும் மில்டனும்-ஒரு புதிய பார்வை). இந்நூல் மிகச்சிறந்த ஒப்பிலக்கிய நூலாகக் கருதப்படும் பெருமை வாய்ந்தது. கம்பராமாயணத்தையும் மில்டனின் துறக்க நீக்கத்தையும் (பேரடைஸ் லாஸ்ட்) விரிவாக ஆராயும் நூல் இது. இரு கவிஞர்களுக்கிடையிலும் காணப் படும் காவியக் கட்டுக்கோப்பு, பழைய காவியங்களின் செல்வாக்கு ஆகியவற்றை முதலில் சுட்டிக்காட்டுகிறார். பிறகு இலட்சிய நோக்கு, நிகழ்ச்சிப்போக்கு, திருப்புமையம், சிக்கல் அவிழ்ப்பு போன்ற தலைப்புகளில் இவ்விரு காப்பியங் களும் இணைந்து செல்லும் முறையை அழகாக விளக்கியுள்ளார். இந்நூலில் கதைமாந்தர்களின் ஒப்பீடு மிகச் சுவையானது. கைகேயியைக் கடவுளோடு (ஆதாமையும் ஏவாளையும் படைத்த திருத்தந்தை) ஒப்பிடுவதும், தசரதனோடு சாம்சனை ஒப்பிடுவதும், புதுமையல்லாமல் வேறு என்ன? இராவணனைச் சாத்தானோடு ஒப்புநோக்குவது எதிர்பார்க்கக் கூடியதே. சிலப்பதிகாரம் பற்றிய ஒப்பியல் ஆய்வுகளிலும் இவர் ஈடுபட்டார்.
பேராசிரியர் கோ. சுந்தரமூர்த்தி வடமொழி இலக்கியக் கொள்கை களையும் தொல்காப்பியக் கொள்கைகளையும் ஒப்பிட்டு ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெ. திருஞான சம்பந்தம் என்பவரும் வடமொழி இலக்கியக் கொள்கைகளையும் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் ஒப்பிட்டுள்ளார்.
கதிர். மகாதேவன், ஒப்பியல் நோக்கில் சங்ககாலக் கவிஞர்களையும், கிரேக்கக் கவிஞர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். தமிழர் வீரப்பண்பாடு’, ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம்’, ‘தொன்மம்ஆகியவை இவரது நூல்கள்.
தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் ஆய்வுமாணவரான க. செல்லப்பன், ‘ஒப்பியல் தமிழ்’, ‘எங்கெங்கு காணினும் சக்தி’, ‘ஒப்பிலக்கியம்-கொள்கைகளும் செயல்முறைகளும்’, ‘இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்’, ‘விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்ஆகிய பத்து நூல்களை எழுதியவர். Shakespeare and Ilango as Tragedians என்ற ஒப்பீட்டு நூலை எழுதினார். ஒப்பிலக்கிய நோக்கில் ஷேக்ஸ்பியரும் இளங்கோவும் எனத் தமிழில் அது வெளிவந்தது. பல ஒப்பியல் கட்டுரைகளையும் அவ்வப்போது வழங்கியுள்ளார். தொன்மவியல் ஆய்வு பற்றியும் எழுதியுள்ளார். இவருடைய ஒப்பீட்டுக்கு ஒரு சிறுசான்று:
வேதநாயகம் பிள்ளையின் புதினத்தில் செழிக்கும் தமிழ் உணர்வை தேசிய உணர்வின் முன்னோடியாகக் கருதவேண்டும். இதைத்தவிர, தலைவி ஆணுடையில் அரசுப்பொறுப்பை ஏற்கும்போதும் ஆனந்தமடத்தின் சாயலைக் காணலாம்….ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகள் போல் ஆனந்தமடத்தின் இறுதியிலும் ஞானம் பேசப்படுகிறது. ஆனந்தமடத்திலும், பிரதாப முதலியார் சரித்திரத்திலும் பாசிடிவிசம், என்லைட்டன்மெண்ட் ஃபிலாச
பியின் தாக்கம் தெரிந்தாலும் பிரதாப முதலியார் சரித்திரம் அவற்றை ஓரளவு கடந்து இந்தியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதுபோல் தெரிகிறது.
இன்றைய கல்வித்துறைசார் ஒப்பியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர்களாக எஸ். இராமகிருஷ்ணன், வை. சச்சிதானந்தன் போன்ற முந்திய தலை முறையினருடன், க. செல்லப்பன், ப. மருதநாயகம், சிற்பி பாலசுப்பிரமணியம், பா. ஆனந்தகுமார் போன்ற இந்தத் தலைமுறையினரையும் கூறலாம்.
சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர். வானம்பாடி இயக்கத்தில் 1970இல் ஈடுபட்டவர்களில் ஒருவர். வானம்பாடிஎன்னும் விலையிலாக் கவி மடலையும், ‘அன்னம்விடு தூதுஎன்னும் பத்திரிகையையும் ஆசிரியராக இருந்து நடத்தினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கவிதை நூல்களன்றி, மொழி பெயர்ப்புகளும் இலக்கியத் திறனாய்வு நூல்களும் எழுதியுள்ளார். லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய அக்னி சாட்சிஎன்னும் மலையாள நாவலின் மொழி பெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கிராமத்து நதிஎன்னும் தமது கவிதைநூலுக்காகச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார். இலக்கியச் சிந்தனைஎன்ற விமரிசன நூலை எழுதினார், பாரதி-வள்ளத்தோள் கவிதைகளை ஒப்பீடு செய்து (A comparative study of Bharati and Vallathol) முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு சிற்பியின் கட்டுரைகள்என்ற நூலாக வெளிவந்துள்ளன. சிற்பியைப் போலவே மலையாள-தமிழ்க் கவிதை ஒப்பீட்டில் ஈடுபட்ட இன்னொருவர் சாமுவேல்தாசன்.
பாலா, ‘பாரதியும் கீட்சும் என்னும் தமது சிறுநூலில் இருவரையும் ஒப்பிட்டுள்ளார். பாரதி முதலில் தெய்வத்தைக் காண்கிறார், அதில் அழகைக் காண்கிறார் என்றும் கீட்ஸ், முதலில் அழகைக் காண்கிறார், பிறகு அதில் தெய்வத்தைக் காண்கிறார் என்றும் விளக்குவது சுவையானது.
ப. மருதநாயகம், ‘கிழக்கும் மேற்கும்’, ‘திறனாய்வாளர் தெ.பொ.மீ.’ ‘மேலை நோக்கில் தமிழ்க்கவிதைபோன்ற பத்து நூல்களைத் தமிழில் வரைந்தவர். பல பல்கலைக்கழகங்களோடு தொடர்புடைய ஆராய்ச்சியாளர். கிழக்கும் மேற்கும்நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எஸ். எலியட் ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். அ. அ. மணவாளனும் ஒப்பியல் துறையில் ஈடுபட்டுச் சில நூல்களைப் படைத்துள்ளார். அரிஸ்டாடிலின் கவிதையியலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்.
ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்’, ‘இலக்கியத் திறனாய்வு முதற்பகுதி’, ‘திறனாய்வுச் சிந்தனைகள்’, ‘ஷெல்லியின் கவிதைக்கலை’, ‘ஷெல்லியும் பாரதியும்-ஒரு புதிய பார்வைபோன்ற பல நூல்களை எழுதி யுள்ளார். ஒப்பாய்வுக் களங்கள் என்ற நூல் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளை முதலில் தெளிவுபடுத்தி, பிறகு தமிழின் முக்கியமான காலகட்டங்களில்-வீரயுகம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், தற்கால ரொமாண்டிக் கவிதை இலக்கியம் போன்றவற்றின் இலக்கியங்களை எவ்வாறு ஒப்பிடலாம் என்பதை விளக்குகிறது.
பா. ஆனந்தகுமார், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். மலையாளம், தெலுங்கு மொழிகளில் பட்டயப்படிப்புப் படித்தவர். இந்திய ஒப்பிலக்கியம்’, ‘பாரதி-ஆசான்-அப்பாராவ் கவிதைகளில் புனைவியல்’, ‘தெலுங்கு இலக்கிய வரலாறுபோன்ற நூல்களின் ஆசிரியர். இவருடைய இந்திய ஒப்பிலக்கியம் என்னும் நூலில், ஒரு சில தமிழ் இலக்கியாசிரியர்களை வேறுசில இலக்கியாசிரியர்களோடு ஒப்பிடும் சிறுசிறு கட்டுரைகள் அடங்கியிருக் கின்றன. இந்நூலின் முன்னுரையில் கா. சிவத்தம்பி, தமிழிலக்கியத்தின் அழகியல் என்பது தனியான ஒன்றா, அல்லது இந்திய அழகியல் கோட்பாட்டினுள் வரக்கூடியதா என்ற கேள்வியை எழுப்புகிறார். நமது இலக்கிய விமரிசனச் சிந்தனைகள் இத்துறையில் அதிகம் செல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை டி. பி. சித்தலிங்கையா, டி. எஸ். சதாசிவம், மு. கு. ஜகந்நாதராஜா போன்றோர் ஒப்பிட்டுள்ளனர். பெ.சு. மணி எழுதிய சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற்புலவர்களும்என்ற நூலும் நோக்கத்தக்கது. இராம. குருநாதன்சங்கப்பாட்டும் சப்பானியக் கவிதையும்என்ற நூலை எழுதி யுள்ளார். ஆ. ரா. இந்திரா என்பவர் மெய்ப்பாட்டு அடிப்படையில் கம்பரையும், ஹோமரையும் ஒப்பிட்டுள்ளார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதவன் போன்ற இக்காலப் படைப் பாளர்களையும் பிறமொழியினருடன் ஒப்பிட்டுச் சில ஆய்வுகள் வந்துள்ளன.
பொதுவாக, ஒப்பிலக்கிய ஆய்வுகள் ஆழமான திறனாய்வுகளாக மலரக் கூடிய வாய்ப்பு இல்லை. காரணங்கள் சில உண்டு.
ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கொள்கை பலம் கிடையாது. அதாவது, ஒப்பிலக்கியத்துக்கெனத் தனிக்கொள்கை என்பது இல்லை. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரொமாண்டிசிசம், புதுத்திறனாய்வு, அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம் போன்றவை தனித்தனி உலகப் பார்வையையும் அது சார்ந்த இலக்கியப் பார்வையையும் கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட தனித்த கோட்பாடு எதுவும் ஒப்பிலக்கியத்திற்கு இல்லை.
இரண்டாவது, ஒப்பிலக்கியம் மொழிபெயர்ப்புகளை நம்பி உள்ளடக்கத்தை மட்டுமே ஒப்பிடுகிறது. வெறும் உள்ளடக்க ஆய்வு திறனாய்வு ஆகாது. ஒப்பிலக்கிய ஆய்வில் உள்ள முக்கியக் குறைபாடு இது. உருவத்தை ஒப்பிட வேண்டுமானால், அல்லது உள்ளடக்கம்-உருவம் இரண்டையும் சமஅளவில் உள்ள அங்ககக் கட்டாக நோக்கி ஆராய வேண்டுமானால், இருமொழியிலும் சமஅளவு புலமை பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால பொதுவாக ஒப்பிலக்கிய ஆய்வுகள் மொழிபெயர்ப்புகளை நம்பியே செய்யப்படுகின்றன. எனவே அவை திறனாய்வாக மலர்தல் மிக அரிது.
மூன்று, உருவம் பற்றிய ஆய்வு மிக அரிதாக இடம் பெற்ற போதிலும், அது உத்திகள்-உவமை-உருவகம்-நோக்குநிலை என்று பட்டியலிடும் போக்காக அமைந்து விடுகிறது. முழுமை நோக்கு முயற்சிகள், உருவத்துடன் உள்ளடக்கத் தைப் பொருத்திப் பார்க்கும் முயற்சிகள் குறைவு.
நான்கு, ஒப்பிடப்படும் நூல்களின் இலக்கியத் தரம் பற்றி நாம் ஏதும் அறிந்துகொள்ள முடிவதில்லை. எல்லா நூல்களும் மிகச் சிறந்த இலக்கிய நூல்களாகக் கருதியே ஆராயப்படுகின்றன.
அடுத்து, இந்நூல்களை இவற்றிற்குரிய இடத்தில் இலக்கிய வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் முயற்சிகள் பெரும்பாலும் இல்லை.
ஆறு, மொழிபெயர்ப்புகளை நம்பும்போதும் அது மூலநூலிலிருந்து நேராகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றால் குறையில்லை. ஆனால் நாம் ஆங்கில வழியாக வரும் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். உதாரணமாக, மராட்டி மொழிப் படைப்பு ஒன்றுக்கும் தமிழ்ப் படைப்பு ஒன்றிற்கும் ஒப்பீடு செய்ய வேண்டுமானாலும் நாம் மராட்டி கற்றுக்கொண்டு அதைச் செய்வதில்லை. மாறாக, மராட்டிப் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை நம்பி ஆய்வில் ஈடுபட்டு விடுகிறோம்.
ஏழாவது, ஒப்பிலக்கியம், இலக்கியத்தின் பொதுமை என்ற அளவில் கருத்துக் கொண்டு தனித்தன்மைகளை மறுத்துவிடுகிறது. கம்பராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் கதையில் பெருமளவு ஒப்புமைகளும் உண்டு. கம்பர் தனியே வகுத்துக்கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் கம்பரின் தனித் தன்மைகள், வெறும் நிகழ்ச்சிகள் அளவில் மட்டுமா இருக்கின்றன? அமைப்பு, நடை, மொழித்திறன், கற்பனை என எத்தனையோ வடிவக்கூறுகளில் அல்லவா இருக்கிறது? இரண்டையும் ஒப்பிட வேண்டுமானால், ஒப்பிலக்கியத்தில் இரண் டின் யாப்புகளையும், சொல்லும் முறையையும், கற்பனை நயத்தையும் ஒப்பிட வழியுண்டா?
திறனாய்வுகளிலும் இதே குறைபாடு உண்டு. க.நா.சு. போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பல நேரடியாகச் செய்யப்பட்டவை அல்ல. அதேபோல, உலகக் கவிதைகளையும் அவற்றின் போக்குகளையும் அறிமுகப்படுத்த முனைந்த பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகளும் ஆங்கில வாயிலாகவே செய்யப்பட்டவை. புதுப்புது இலக்கிய இயக்கங்களை அறிமுகப்படுத்த முனைந்தோரின் நிலைமையும் இதுவே. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
தனித்த விளக்கமுறை ஆய்வுகள், இலக்கியத் தகவோ, வரலாற்று ரீதியான இடமோ அறுதியிடப்படாதபோது பயனற்றுப் போகும். இக்குறைகள் தமிழ் ஆய்வுகளில் களையப்பட வேண்டும். ஒப்பிலக்கியம் பற்றிய பாடநூல்களையும் சிலர் எழுதினர். அவை யாவும் குறையுடையவைகளே. எவ்வகையிலும் சிறப்பானவை அல்ல. இவற்றைப் படித்து ஒப்பிலக்கிய ஆய்வு செய்யத் தெரிந்து கொண்டவர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.
மேலும் ஒப்பியல் திறனாய்வு, தனித்தனி இலக்கிய கர்த்தாக்களை ஒப்பிடுவது என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கிய இயக்கத்தை அல்லது சூழலை இன்னொரு இலக்கிய இயக்கத்துடன் அல்லது சூழலுடன் ஒப்பிடுவது என்ற நிலைக்கு உயரவேண்டும். உதாரணமாக, தமிழின் புனைவியல் அல்லது கற்பனாவாத இலக்கியத்தை வங்காளிமொழியின் கற்பனாவாத இயக்கத்துடன் ஒப்பிடவேண்டும். இம்மாதிரி ஆய்வுகள்தான் உண்மையான பயனை நல்கும். இத்தகைய ஆய்வுகள் இன்னும் தமிழில் தோன்ற வில்லை.
ஒப்பிலக்கியம் என்ற துறை குறைபாடுடையது என்றாலும் இன்றைய தேவையாகவும் இருக்கிறது. காலதேச வரையறைகளை மீறி, பண்பாடுகளின் ஊடாகக் காணப்படும் பொதுமைகளையும் தனித்துவங்களையும் காணப் பயன் படுவது ஒப்பிலக்கியமே ஆகும். கலையின் உலகப் பொதுமையை வலியுறுத்திக் குறுகிய மனப்பான்மையினைக் களையக் கூடியதும் ஒப்பிலக்கியமே.

Thursday 12 October 2017

டெங்கு


                                                                                                                                                                                   தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெங்கு பரவலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதற்கும் இயலாமல் அரசு திணறிவருகிறது. உண்மையில், இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதன் பின்னணியில் அரசின் அலட்சியம் இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.

பணமதிப்பு நீக்கம்

      பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க ஒரு அரசு எடுக்கும் நடவடிக்கை எனும் வகையில் அதை வரவேற்கலாம்தான். ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் மிக மோசமானது. பணமதிப்பு நீக்கத்தால் 35% வேலையிழப்பும், கிட்டத்தட்ட 50% வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.மார்ச் மாதம் வாராக்கடன் அதிகரித்தது தொடர்பான புள்ளிவிவரங்கள் வந்த பின்னர்தான் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு தெரியவந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த பின்னர், பெரிய நிறுவனங்களின் ‘பேலன்ஸ் ஷீட்’ வந்த பின்னர், பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கின. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒவ்வொரு நிறுவனமும் அழிவை நோக்கியோ அல்லது மூடுவிழாவை நோக்கியோ சென்றுகொண்டிருந்தது.
ஆனால், அரசு இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. வாராக்கடன் கடுமையாக அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் சிறுதொழில் நிறுவனங்கள், வங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாததுதான். வாராக்கடன் மறுகட்டமைப்புத் திட்டத்தைக் கொண்டுவருவதாக ரிசர்வ் வங்கி சொன்னது. ஆனால், வங்கிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதே தவிர, வாராக்கடன்களுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் வரவேயில்லை.
சிறுதொழில் என்பது நாட்டுக்கு மிக முக்கியமானது என்பதால், அது நலிவடைந்துவிடக் கூடாது.  சிறுதொழில்களுக்கு அடமானமில்லாக் கடன் ரூ. 1 கோடியிலிருந்து ரூ.2 கோடிக்கு அதிகரிப்பதாக டிசம்பர் 31-ல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே ரூ.1 கோடிக்கான கடனுக்கே சொத்தை வாங்கிக்கொண்டுதான் கடன் கொடுக்கப்படுகிறது. அதில் மேலும் ஒரு கோடியை உயர்த்துவதால் பலன் என்ன?
பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாட்டில் 24% சிறுதொழில்கள் அழிந்துவிட்டன. கடும் பாதிப்பிலிருந்து வெளிவரத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில், ஜூன் 15 அன்று ஒரு அறிவிப்பு வெளிவந்தது - ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படும் என்று! எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. எந்தவித முன்தயாரிப்பு இல்லாமல் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவருவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

Wednesday 11 October 2017

தொழில் முனைவோர்

ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின்  தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். பொருத்துகை ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பெருமளவிலான மலிவான தானுந்துகளைத் தயாரிக்கும், ஃபோர்டியம் எனப்பட்ட பெரும்படித் தயாரிப்பு முறையை இவர் உருவாக்கியதுடன், அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். நுகர்வோரியமே அமைதிக்கான வழி என்னும் நம்பிக்கையுடன் கூடிய, ஒரு உலகம் தழுவிய நோக்கை ஃபோர்ட் கொண்டிருந்தார்.
உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான ஃபோர்டின் முயற்சிகள், பல தொழில்நுட்ப, வணிகப் புத்தாக்கங்களுக்கு வழிவகுத்தன. இவற்றுள் விற்பனைஉரிம  முறையும் ஒன்றாகும். இதன் மூலம் அவரது உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனையாளர்கள் அமெரிக்காவின் ஒவ்வெரு நகரத்திலும் இருந்தனர். ஐரோப்பாவிலும் பெரிய நகரங்களில் விற்பனை முகவர்கள் இருந்தனர். ஃபோர்ட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஃபோர்ட் அடிப்படை நிலையத்துக்கு விட்டுச் சென்றார். ஆனால், தனது குடும்பம் கம்பனியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தார்.

வேதியியலாளர்கள்

கெபெர் என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் கெபெர் என இலத்தீனாக்கம் பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.

கருவேப்பிலை குழம்பு



       கருவை காப்பதால் தான் “கருவேப்பிலை” என்ற பெயர் வந்ததாக கூறுவர் .உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தாளிதம் செய்வதையும் தூக்கி தூர எரிந்து விடுவார்கள், ஆனால் கருவேப்பிலையில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதனால் இதையே ஒரு உணவாக உட்கொண்டால் சத்துகள் அனைத்தும் அப்படியே கிடைத்து உடலுக்கு வலு சேர்க்கும்,

Sunday 8 October 2017

மீத்தேன் அரக்கன்!


        காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்! .... ( நன்றி: சூ.விகடன் )

            பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு. கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன? மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு! பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன. காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும். இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்! உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது! அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது. கீழே உள்ள படங்களை பார்க்க அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர். நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது! மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது... ''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது. காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு? இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு. ''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், 35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம். மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.

குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்! தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்? இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்! ''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.

''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.

கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை. கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம் ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை! சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம். இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது.

அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார். கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன? மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.

கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும். கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

நன்றி: சூ.விகடன்