Thursday 12 October 2017

பணமதிப்பு நீக்கம்

      பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க ஒரு அரசு எடுக்கும் நடவடிக்கை எனும் வகையில் அதை வரவேற்கலாம்தான். ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் மிக மோசமானது. பணமதிப்பு நீக்கத்தால் 35% வேலையிழப்பும், கிட்டத்தட்ட 50% வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.மார்ச் மாதம் வாராக்கடன் அதிகரித்தது தொடர்பான புள்ளிவிவரங்கள் வந்த பின்னர்தான் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு தெரியவந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த பின்னர், பெரிய நிறுவனங்களின் ‘பேலன்ஸ் ஷீட்’ வந்த பின்னர், பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கின. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒவ்வொரு நிறுவனமும் அழிவை நோக்கியோ அல்லது மூடுவிழாவை நோக்கியோ சென்றுகொண்டிருந்தது.
ஆனால், அரசு இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. வாராக்கடன் கடுமையாக அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் சிறுதொழில் நிறுவனங்கள், வங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாததுதான். வாராக்கடன் மறுகட்டமைப்புத் திட்டத்தைக் கொண்டுவருவதாக ரிசர்வ் வங்கி சொன்னது. ஆனால், வங்கிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதே தவிர, வாராக்கடன்களுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் வரவேயில்லை.
சிறுதொழில் என்பது நாட்டுக்கு மிக முக்கியமானது என்பதால், அது நலிவடைந்துவிடக் கூடாது.  சிறுதொழில்களுக்கு அடமானமில்லாக் கடன் ரூ. 1 கோடியிலிருந்து ரூ.2 கோடிக்கு அதிகரிப்பதாக டிசம்பர் 31-ல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே ரூ.1 கோடிக்கான கடனுக்கே சொத்தை வாங்கிக்கொண்டுதான் கடன் கொடுக்கப்படுகிறது. அதில் மேலும் ஒரு கோடியை உயர்த்துவதால் பலன் என்ன?
பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாட்டில் 24% சிறுதொழில்கள் அழிந்துவிட்டன. கடும் பாதிப்பிலிருந்து வெளிவரத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில், ஜூன் 15 அன்று ஒரு அறிவிப்பு வெளிவந்தது - ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படும் என்று! எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. எந்தவித முன்தயாரிப்பு இல்லாமல் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவருவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment