Sunday 15 October 2017

தியேட்டர் உரிமையாளர்கள் கோபம்..!

      அரசின் கேளி்க்கை வரியை எதிர்த்து தனது போராட்டத்தை ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் தற்போதைய எதிர்ப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மீது பாய்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக செய்தித் துறை அமைச்சருடன் கேளிக்கை வரிவிலக்கு, மற்றும் திரையரங்குகளின் புதிய கட்டண உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார் விஷால்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது திரையரங்கு உரிமையாளர்கள் கேளி்க்கை வரி நீக்கத்தைவிடவும், தற்போதைய கட்டண உயர்வைவிடவும் அதிகமான கட்டணத்தை கேட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இதனால் விஷாலுக்கும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் 120 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வேண்டாம் என்று விஷால் சொல்ல.. மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களோ இப்போதைய கட்டணத்தை இன்னும் உயர்த்தித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். திரைப்பட உலகின் சங்கங்களிடையே இருக்கும் இந்த மோதலினால், அரசுத் தரப்பு ஒரு நிலையான முடிவுக்கு வர முடியாமல் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நேற்று இரவு திடீரென்று விஷால் ஒரு அறிவி்ப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் திரையரங்குகளின் இப்போதைய நிலைமையை மாற்றியமைக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டிருக்கிறார். 
இதனை பார்த்துவிட்டு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் விஷால் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
விஷால் வெளியிட்ட அறிவிப்புகள் இவைகள்தான் :
“இன்று முதல்(அக்டோபர் 13, வெள்ளிக்கிழமை) அரசு நிர்ணயம் செய்திருக்கும் கட்டணங்களைத்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.
தியேட்டர் கேண்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் MRP விலைக்குதான் விற்கப்பட வேண்டும்.
அம்மா தண்ணீர் பாட்டில்கள் தியேட்டரில் விற்கப்படவேண்டும்.
தியேட்டர்களுக்கு தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்.
தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும்.”
இந்த அறிவிக்கையை கேள்விப்பட்டு எங்களுடைய உரிமையில் கை வைக்க விஷாலுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரின் பதிலடி விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவை அழிப்பதற்கு பைரசி வீடியோவும், தமிழ் ராக்கர்ஸும் தேவையே இல்லை. இப்போது இருக்கின்ற திரைப்பட சங்கங்களே போதும்..!

No comments:

Post a Comment